இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

பப்ஸ், பர்கர்,பீட்ஸா பணம் பார்க்க பேஷ்.. பேஷ்

பர்கர், பீட்ஸா, பப்ஸ் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் நகரங்களை ஆக்கிரமித்து கிராமங்களிலும் தலைகாட்டத் தொடங்கி விட்டன. பன், கேக் உள்ளிட்டவைக்கும் கிராக்கி உள்ளது. இவற்றை தயாரித்து விற்கும் யுத்தியை அறிந்து கொண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை தொப்பம்பட்டியில் ஸ்ரீஅலம்பதா பேக்கரி உணவுக் கூடம் நடத்தி வரும் கோகிலவாணி. அவர் கூறியதாவது: கணவர் விஜயகுமார் ஒரு தொழிற்சாலையில் கேன்டீன் நடத்தி வருகிறார். இதற்காக 4000 பேருக்கு தேவையான உணவு தயாரிக்க சமையல் கூடத்தை தொப்பம்பட்டியில் கட்டியுள்ளார். கணவரின் சமையல் தொழிலை நானும் செய்ய விரும்பினேன்.
அதனால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேக்கரி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். தனியாக தொழில் துவங்க முன்னோட்டமாக, பல்கலை. தொழிற்பயிற்சி நிலையத்தில் தயாரிப்பு இயந்திரங்களை பயன்படுத்தி பேக்கரி உணவுகள் தயாரித்தேன்.

அவற்றை கோவையில்உள்ள சில பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு சாம்பிள் வழங்கினேன். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழக்கமாக வழங்கும் பேக்கரி உணவுகளுக்குப் பதில், நான் தயாரித்த பப்ஸ், கேக், சாண்ட்விச் பிரட்களை வழங்கினர்.நான் தயாரித்த உணவுகளின் மணம், சுவை, மிருதுதன்மை, மொறுமொறுப்பு பலருக்கும் பிடித்து போனது. விலையும் ஏற்றதாக இருந்ததால் எனக்கு ஆர்டர் கொடுத்தார்கள். இதனால் தொழில் சூடு பிடித்தது. எனது கணவரின் சமையல் கூடத்தின் ஒரு பகுதியில் இயந்திரங்களை நிறுவி பேக்கரி துவக்கினேன். கோவையில் 3 பொறியியல் கல்லூரி, ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு ஐடி நிறுவனம் மற்றும் 10 கடைகளுக்கு தினசரி விற்கிறேன். தரத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் நிலையான வரவேற்பு உள்ளது. பல பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் புதிதாக ஆர்டர் கொடுத்து வருகின்றன.
இந்த தொழிலில் போட்டி அதிகம். அதேசமயம் லாபத்தை குறைத்து, தரத்தை அதிகப்படுத்தினால் கூடுதல் வாடிக்கையாளர்களை பெற முடியும். இதுவே தொழில் வெற்றிக்கு தாரக மந்திரம். இவ்வாறு கோகிலவாணி கூறினார்.

தயாரிப்பது எப்படி?

பன், பர்கர், பப்ஸ், கேக், பிரட் தயாரிக்க மைதா மாவு, சர்க்கரை, உப்பு, டால்டா, ஈஸ்ட், தண்ணீர், முட்டை, கேக் ஜெல், எசென்ஸ், வெள்ளை எள், சிபி எனப்படும் வேதிப்பொருள், டூட்டி புரூட்டி துண்டுகள் தேவைப்படுகின்றன. தயாரிக்கும் உணவுக்கேற்ப, பொருட்களை மிக்ஸிங் மெஷினில் போட்டு 15 நிமிடம் இயக்கினால் மிருதுவான மாவு கிடைக்கும். அதை பல்வேறு அளவு டப்பாக்களில் நிரப்பி, 45 நிமிடங்கள் ஊற வைத்தால், மாவு புஸ்ஸென்று உப்பியிருக்கும். பின்னர் டப்பாக்களை டிராலியில் அடுக்கி, ட்ராலியை ஓவன் மெஷினில் வைத்து மூட வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் அரை மணி நேரம் இயக்கினால், மாவு வெந்து பன், பிரட், கேக் தயார். பன் மாவின் மேல் வெள்ளை எள் தூவி வேக வைத்தால் அது பர்கர் பன். சாதா பப்ஸ் தயாரிக்க மாவுக்கலவையை மெல்லியதாக தேய்த்து, பல மடிப்புகளாக மடித்து டப்பாக்களில் ஊற வைத்து, வேக வைக்க வேண்டும்.

உள்ளே அவித்த முட்டை, காய்கறிகள், சிக்கன், பனீர், காளான் வைத்து வேக வைத்தால் பலவிதமான பப்ஸ்கள் கிடைக்கும். பிரட்டை ஸ்லைஸ் செய்தோ, செய்யாமலோ பேக் செய்யலாம். மைதாவுக்கு பதில் கோதுமை, ஓட்ஸ் மூலம் பிரட் தயாரிக்கலாம். கேக்ஜெல், ஈஸ்ட், எசென்ஸ், சிபி, டூட்டி புரூட்டி ஆகியவை பேக்கரி தயாரிப்பு பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். மிக்ஸிங் மெஷின், ஓவன் மெஷின் முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. பேக்கரி தயாரிப்பு குறித்த பயிற்சிகளை பெற வேளாண் பல்கலை., மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

முதலீடு

20க்கு 30 அடி நீள, அகலமுள்ள இடம். மிக்ரூங் மெஷின் ரூ1.95 லட்சம், ஓவன் மெஷின் ரூ4.7 லட்சம், சிலைசர் மெஷின் ரூ47 ஆயிரம், டப்பாக்கள், டிராலி, டேபிள்
ஆகியவை ரூ28 ஆயிரம் என கட்டமைப்புக்கு ரூ7.4 லட்சம் தேவை. ஒரு மாத உற்பத்திக்குத் தேவையான பொருள்கள், 5 தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம், இடவாடகை, போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்கு மாதம் ரூ3 லட்சம் தேவை. அதிக முதலீடு என்பதால் 2, 3 பேர் சேர்ந்து தொழில் துவங்கலாம். வங்கி கடனுதவியும் பெற முடியும்.

மாதந்தோறும் லட்ச ரூபாய் லாபம்

மாதந்தோறும் 25 நாளில் உத்தேசமாக 53 ஆயிரம் பன், 2,600 பிரட் (பெரியது), 5,300 பிரட் (சிறியது), 10,600 பப்ஸ், 650 முட்டை பப்ஸ், 355 கிலோ கேக் தயாரிக்கலாம். வாடிக்கையாளர் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ தயாரிக்கலாம். பன் ரூ3, பெரிய பிரட் ரூ30, சிறிய பிரட் ரூ15, சாதா பப்ஸ் ரூ4.50, முட்டை பப்ஸ் ரூ6, கேக் கிலோ ரூ90க்கு விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ4 லட்சம். உற்பத்தி செலவு ரூ3 லட்சம். மாத லாபம் ரூ1 லட்சம்.

மார்க்கெட்டிங்:

பேக்கரி உணவுகள் சில நாள் வரை கெடாமல் இருக்கும் என்பதால், டீக்கடைகள், ஓட்டல், ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, கேன்டீன், பள்ளி, கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் பேக்கரி உணவுப்பொருள் விற்க ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் தேவைப்படுவதால் நிரந்தர விற்பனை வாய்ப்பு உள்ளது. இந்த கடைகளுக்கு சப்ளை செய்யலாம். பேக்கரியின் லேட்டஸ்ட் வரவான பீட்ஸா நகரங்களில் பிரபலமாகி வருகிறது. பீட்ஸாவை யும் குறைந்த விலையில் தயாரித்து விற்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites