இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 3, 2011

கண்களை கண்காணிங்க



பெற்றோர்கள் பிள்ளைகளைக் கொண்டுபோய் குருவிடம் ஒப்படைத்துவிட்டு வருவார்கள்.
அப்போது குருவைப் பார்த்து, `குருவே என் பிள்ளையை அடிங்க, உதைங்க, என்ன வேணும்னாலும் பண்ணுங்க; ஆனா அவனை உங்க கண்ணுபோலப் பார்த்துக்கோங்க' என்று சொல்லிவிட்டு வருவார்கள். இதிலுள்ள அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு! அதாவது பிள்ளையை அடிக்கலாம், உதைக்கலாம், என்ன வேணுமானாலும் பண்ணலாம் என்று சொல்லிவிட்டு கடைசியில் குருவின் கண்ணைப்போல பார்த்துக்கோங்க என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவன் மேல கையை வைக்காதீங்கன்னு அர்த்தமா? என்று கேட்கக்கூடாது.
கண்ணைவிட விலை உயர்ந்த, மதிப்புமிக்க, முக்கியமான உறுப்பு உடலில் வேறு எதுவும் இல்லை என்பதால்தான் `கண்ணைப்போலப் பாத்துக்கோங்க' என்று பெற்றோர்கள் சொன்னார்கள். உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் இயற்கை கொடுத்த மிகப்பெரிய பரிசு கண், நான் எப்படி இருப்பேன்? நீ எப்படி இருப்பாய், இந்த உலகம் எப்படி இருக்கும்? என்பதைக் காட்டும் கண்ணாடிதான் கண்.
உலகில் படைக்கப்பட்ட உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் பார்க்க, பார்த்து ரசிக்க, பார்த்து வியக்க, பார்த்து பாராட்ட, நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் கண்கள். கண் பார்வை உள்ள நாம் கண் பார்வை இல்லாதவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை ஒரு நிமிடம் உணர்ந்து பார்த்திருப்போமா? இந்தியாவில் சுமார் 11/2 கோடி பேர் கண் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
அதாவது உலகத்திலுள்ள மொத்த கண் பார்வையற்றோர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தியாவில் இருக்கிறார்களாம். இது வருந்தத்தக்க விஷயம்தானே? இந்த 11/2 கோடி பேரில் கருவிழியிலுள்ள பாதிப்பினால் கண் தெரியாதவர்கள் சுமார் 35 சதவீதம் பேர் இருக்கிறார்களாம். அதாவது சுமார் 52 லட்சம் பேர்.
வேத காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பகல் 12 மணிக்கு சூரிய ஒளியை கண் சிமிட்டாமல் பார்ப்பார்களாம். அந்த அளவுக்கு அவர்களது கண்களுக்கு சக்தி இருந்ததாக சொல்வது உண்டு. கண் என்றாலே பார்ப்பதற்குத்தான். பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை ஒவ்வொரு வினாடியும் நம் கண் முன் வரும் காட்சிகள் அனைத்தையும் இந்தக் கண்களால்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பிறந்தவுடனேயே நமக்கு கண் தெரிய ஆரம்பித்தாலும், துல்லியமான பார்வை வர சுமார் ஒரு வருடம் ஆகும். அதோடு இறக்கும் வரை கண் தெரியத்தான் செய்யும். நூறு வயதுக்கு மேலானாலும் சரி உடம்பை ஒழுங்காக பராமரித்து வந்தால் கண் நன்கு தெரியத்தான் செய்யும். கண் பார்வை குறையாது. பார்வை பல வகைப்படும்.
அன்புப் பார்வை. ஆசைப் பார்வை, அழகுப் பார்வை, இன்பப் பார்வை, இரக்கப் பார்வை, ஓரப் பார்வை, கள்ளப் பார்வை, காந்தப் பார்வை, சாந்தப் பார்வை, ஏக்கப் பார்வை, அரக்கப் பார்வை, வெகுளிப் பார்வை, சீற்றப் பார்வை, கழுகுப் பார்வை, கோபப் பார்வை, கிட்டப் பார்வை, தூரப் பார்வை. இப்படி குணங்களுக்கு ஏற்றபடி பார்வையும் வேறுபடும்.
ஒருவருடைய கண்களைப் பார்த்தே அவருடைய குணாதிசயங்களைக் கண்டுபிடித்து விடலாம்.கண்களைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான் மிகமிக முக்கியமானது. பார்வை உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பார்வை இல்லாதவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்.
பார்வை உள்ளவர்களுக்கு கண்கள் நன்றாக துல்லியமாக தெரியும்வரை பிரச்சினை ஒன்றும் கிடையாது. ஒழுங்காகத் தெரியவில்லை என்கிற போதுதான் பிரச்சினைகள் மெதுமெதுவாக ஆரம்பிக்கும். வீட்டில் சில குழந்தைகள் கண்களை கைகளால் கசக்கிக் கொண்டே இருக்கும். சில குழந்தைகளுக்கு லேசாக கண்ணீர் வடிவதும் உண்டு.
இம்மாதிரி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலும் பிரச்சினை இருக்கும். "அம்மா, வாத்தியார், பிளாக் போர்டுல எழுதுற எழுத்து எனக்கு சரியாவே தெரிய மாட்டேங்குது, முன்வரிசையில போய் கிட்ட உட்கார்ந்தாதான் தெரியுது. ஆனால் வாத்தியார் முன் வரிசையில உட்கார விடமாட்டேங்கிறார்'' என்று குழந்தை அம்மாவிடம் குறையாக சொல்லும்போதுதான் பெற்றோர்களுக்கே `குழந்தையின் கண் பார்வையில் ஏதோ பிராப்ளம் இருக்கு.
கண் டாக்டர்கிட்ட போகணும்' என்று நினைப்பார்கள். படிக்கிற குழந்தைகளுக்கு கண் பார்வையில் குறை இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிப்பவர் வாத்தியார் தான். அடுத்ததாக வீட்டிலுள்ளவர்கள் கண்டுபிடிக்கலாம். கல்லூரியில் படிக்கிற காலத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும்போது தூரத்தில் வரும் பஸ் நம்பரை எல்லோரும் சொல்லி விடுவார்கள்.
ஆனால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களால் சொல்ல முடியாது. பஸ் நம்பரை சரியாகச் சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் கண் டாக்டரிடம் போய் டெஸ்ட் பண்ண வேண்டியவர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் மற்றும்பெரியவர்களை கண்ணாடியோடு பார்ப்பது என்பது ரொம்ப ரொம்ப குறைவு.
அந்தக் காலத்திலுள்ள சிலைகளிலும், ஓவியங்களிலும் கூட கண்ணாடி அணிந்திருப்பவர்களைப் பார்க்க முடியாது. காரணம், அப்பொழுது கண்களை நன்கு பாதுகாத்தார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் நான்கு ஐந்து வயதிலேயே கண்ணாடி போட்டிருக்கும் குழந்தைகளைப் பார்ப்பது என்பது ரொம்ப சாதாரணமாகி விட்டது.
நாம் பார்த்து கற்றுக்கொள்ளும், பேசி கற்றுக்கொள்ளும், படித்து கற்றுக் கொள்ளும் விஷயங்களில் சுமார் 60 சதவீதம் கண்களினால்தான் நடைபெறுகிறது. பார்ப்பதற்கு மட்டும் கண்கள் பயன்படாமல் அதற்கும் ஒரு படி மேலாக பல விஷயங்களை கிரகிப்பதற்கும் கண்கள் பயன்படுகின்றன.
அரைகுறை பார்வை...........
பார்வையில் ஏற்படும் குறைபாடுகள் நிறைய உள்ளன.
1. தூரத்தில் இருக்கும் பொருள் தெரியாமற் போவது,
2. கிட்டத்தில் இருக்கும் பொருள் தெரியாமற்போவது,
3. மாலை நேரம் ஆனால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போவது,
4. கலர்கள் அனைத்தும் தெரியாமற்போவது,
5. ஒரு சில கலர்கள் மட்டும் தெரிவது,
6. வயது ஆக ஆக பகலிலேயே பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது,
7. ஒரு கண் சரியாக தெரிந்து மற்றொரு கண் சரியாக தெரியாதது,
8. சமீபகாலமாக பேப்பரிலுள்ள சிறிய எழுத்துக்கள் சரியாக தெரியாமற்போவது,
9. லைட் வெளிச்சம் எல்லாம் துல்லியமாக கரெக்டாக தெரியாமல் மங்கலாகத் தெரிவது,
10. பார்க்கும்போது கோடுகள், வட்டங்கள், பூச்சிகள், புழுக்கள் போன்ற உருவங்கள் வந்து வந்து போவது,
11. ஒரு விநாடிக்கு சுத்த இருட்டு வந்துபோவது அதாவது அறவே கண் தெரியாமல் போய் மறுபடியும் பார்வை வருவது,
12. கண்ணாடியை கழற்றிவிட்டால் ஏதோ மேக மூட்டம் போன்று எதிரில் தெரிவது,
13. உருவங்கள் எல்லாம் இரண்டு இரண்டாகத் தெரிவது,
இதுபோன்று இன்னும் நிறைய குறைபாடுகள் நிறைய பேருக்கு வந்திருக்கும். மேற்கூறிய குறைபாடுகள் உள்ள அனைவருமே உடனடியாக கண் டாக்டரைப் பார்த்து கண்களை டெஸ்ட் பண்ணிக் கொள்வது நல்லது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites