இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி



பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது நெல்லிக்காய். ஜீரண கோளாறு, பல் சம்பந்தமான பிரச்னைகள், வாய் துர்நாற்றம், மாதவிலக்கு தொல்லைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. இத்தகைய நெல்லிக்காயை மக்கள் விரும்பி வாங்கும் வகையில் ஜூஸ், குவாஷ், மிட்டாய், ஜாம், பாக்கு, கூந்தல் தைலம், ஊறுகாய் என பல்வேறாக தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ‘ருகி அம்லா‘ நிறுவன உரிமையாளர் அக்தர் நவாஸ். அவர் கூறியதாவது:
பிகாம் பட்டதாரியான நான் திருமணத்துக்கு பிறகு கணவரின் ஸ்டூடியோவை கவனித்து வந்தேன். வீட்டிலேயே பியூட்டி பார்லரும் நடத்தினேன்.

அப்போது தான் வகைவகையாய் ஜூஸ்கள் தயாரிப்பதற்கான பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நெல்லிக்கனி ஜூஸ் தயாரிக்கும் பயிற்சியை பெற்றேன். நெல்லிக்காய் ஜூஸ் மார்க்கெட்டுக்கு புதிது என்பதால் ருகி அம்லா என்ற பெயரில் ஜூஸ் தயாரித்து அக்கம், பக்கத்து வீடுகளில் விற்றேன். பின்னர் அன்னை தெரசா மகளிர் குழுவாக சேர்ந்து, ஜூஸ் என்பதோடு நிறுத்தி விடாமல் நெல்லி குவாஷ், ஊறுகாய், லேகியம், ஜாம், பாக்கு, மிட்டாய் என பல பொருட்களை தயாரித்தோம். பெரிய கடைகளில் ஆர்டர் எடுத்து விற்கத் தொடங்கினோம்.

கடந்த 2 ஆண்டுகளாக இயந்திரங்கள் கொண்டு ஜூஸ் தயாரித்து கோவை, சென்னை என பல்வேறு மாவட்டங்களுக்கும் எங்களது உற்பத்தி பொருட்களை அனுப்பி வருகிறோம். விரைவில் நெல்லிக்காய் பாக்கை பிரபலப்படுத்துவதற்கு முயற்சியெடுக்க இருக்கிறோம். தன்னம்பிக்கையுடன், முழு ஈடுபாட்டோடு எந்த ஒரு செயல் செய்தாலும், அது நிச்சயம் நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்கிறார் அக்தர் நவாஸ்.

முதலீடு

நெல்லிக்காய் துருவும் இயந்திரம் ரூ.80 ஆயிரம். துருவலை அரைக்கும் பல்வரைசர் ரூ.55 ஆயிரம். பாய்லர் ரூ.20 ஆயிரம். ப்ரீசர் ரூ.35 ஆயிரம். சோடா மூடி போடும் மெசின் ரூ.10 ஆயிரம்.

கட்டமைப்பு

இயந்திரங்கள் அமைக்க ஏற்ற மாதிரி ஒரு இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.

மூலப்பொருட்கள்

ஜூஸ் மற்றும் குவாஷ் தயாரிப்புக்கு பெரிய நெல்லிக்காய், சீனி. ஜாம் தயாரிக்க பெரிய நெல்லிக்காய், நெய். கூந்தல் தைலத்துக்கு நெல்லி சாறு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சில மூலிகை பொருட்கள். பாக்கு தயாரிக்க நெல்லிக்காய் துருவலோடு சீரகம், மிளகு பொடி. நெல்லிக்காய் மிட்டாய் செய்வதற்கு சீனி பாகில் ஊறவைத்த நெல்லிக்காய் துண்டுகள் தேவை.

உற்பத்தி செலவு

50 கிலோ நெல்லிக்காயில் இருந்து 36 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை சீசன் சமயத்தில் மாதத்துக்கு ஆயிரம் ஜூஸ் பாட்டில்கள் தயாரிக்க முடியும். மூலப்பொருட்கள் செலவு, 3 வேலையாட்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.1 லட்சம் தேவை.

மாத லாபம் ரூ.20 ஆயிரம்

மாதம் உற்பத்தியாகும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களின் மூலம் உற்பத்தியாளருக்கு லாபம் 20 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகள் நேரடியாகவும், சர்வோதயா, உழவர் சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் மூலமும் மக்களை சென்றடைகிறது.

தயாரிப்பது எப்படி?

நெல்லிக்காய் ஜூஸ்

1 லிட்டர் சாறுடன் 2 லிட்டர் சீனி பாகு கலக்க வேண்டும். இரண்டும் சேர்ந்த கலவையை பாய்லரில் 90 டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைத்து 60 டிகிரியாக குறைந்ததும் பேக் செய்ய வேண்டும். அப்போது தான் 2 மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். 200 மில்லி ஜூஸ் ரூ.5க்கு விற்கப்படுகிறது. மற்ற குளிர்பானங்களை விட விலை குறைவாகவும், சத்துகள் நிறைந்ததாகவும் உள்ளது.

குவாஷ்

கெட்டியான ஜூஸ் மற்றும் சீனி பாகு கலந்து குவாஷ் தயாரிக்கப்படுகிறது. இதனை பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது ஒரு பங்கு குவாஷ்க்கு 4 பங்கு தண்ணீர் சேர்த்து பருகலாம். 500 மிலி ரூ.150க்கு விற்கப்படுகிறது.

பாக்கு

காயவைத்த நெல்லிக்காய் துருவலோடு மிளகு, சீரகம் மற்றும் புதினா பேஸ்ட்டை கலந்து காய வைத்து பேக் செய்ய வேண்டும். இதனை மெல்வதன் மூலம் வாயில் துர்நாற்றம் அடிக்காது. மற்ற பாக்கை சாப்பிட்டால் ரத்தசோகை ஏற்படும். இதில் அந்த தொல்லை இல்லை.

மிட்டாய்

நெல்லிக்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி காய வைத்து சீனி பாகில் 10 நாட்கள் ஊற வைத்து காய்ந்ததும் பின்னர் பேக் செய்ய வேண்டும்.

கூந்தல் தைலம்

நெல்லிக்காய் சாற்றுடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி போன்றவை சேர்த்து தயாரிக்க வேண்டும்.

லேகியம்

நெல்லிக்காய் துருவலோடு, அதிமதுரம், கூகை நீர், வால் மிளகு உள்பட 10 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை தினமும் சிறிது உண்பதன் மூலம் சளி பிடிக்காது. மூட்டு, முதுகு வலி வராமல் தடுக்கும்.

ஜாம்

நெல்லிக்காய் துருவலோடு, சிறிது நெய், சீனி பாகு சேர்த்து கிளற வேண்டும். ஜாம் பதத்துக்கு வந்ததும் இறக்கி விட வேண்டும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பாத்தி, இட்லி, தோசை, பிரட்டுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

4 comments:

தங்களுடைய மொபைல் நம்பர் தருமாறு கேட்டு கொள்கிறேன் என்னிடம் இந்த வகை porulgalukku சில ஆர்டர் இருக்கிறது. மொபைல் நம்பரை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் chemicaljaiprakash@gmail.com

தங்கள் வருகைக்கு நன்றி

தாங்கள் வருகைக்கு நன்றி திருமதி சாவித்திரி அரவிந்த் குமார் அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites