இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 25, 2012

சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...

சவூதியில் "ஹுரூப்"  "Run away "  "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதென்ன சட்டம்... "ஹூரூப்"...?

"ஹூரூப்" என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், உதாரணமாக ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை 'ஜவாஸாத்தில்' (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியலில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால்... சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலை, வேலைக்கு தகுந்த ஊதியமின்மை, உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காதது, வாகன ஓட்டுனர்களுக்கு- குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது, விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொன்னாத் துயரங்கள்... போன்ற அவலநிலை நிலவுகிறது. 

இதுபோன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையைும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும். 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று...

சவூதி அரேபியாவில் செயல்படும் ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்)  இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல், 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது அதன் அதிகாரி...  

'முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது (!?)' என்று வியந்து பாராட்டினார். 'இன்ஷாஅல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம்' என்று சொல்லிய அமைச்சகம் 'முதலில் உங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இன்று செப்டம்பர் 3-ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் Mr.Talmiz Ahmad தனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் Mr.Hamid Ali Rao எதிர்வரும் 15-ம் தேதி பொறுப்பெடுக்க உள்ளார். புதிய தூதர் UN-ல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. 

அதனடிப்படையில் http://www.hurub.com/ என்ற இணையம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உள்ள மனு படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவிகளின் தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழத்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.


சவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் மேலே குறிப்பிட்டுள்ள http://www.hurub.com/ இந்த இணைய முகவரியில் உள்ள மனு படிவத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.  குறிப்பாக தமுமுக அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகளும் இந்த பணியை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்கள் எதற்கும் அந்த வலைப்பக்கத்தை புக்மார்க்கில்/ஃபேவொரைடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கேனும் உபயோகப்படலாம்.

குறிப்பு:- இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுக்கும் அனுப்பி வைக்கவும்..! முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும்..! 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்..!
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி  :   
சகோ. ஹூஸைன் கனி
 ரியாத், சவூதி அரேபியா. 
-------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites