இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 19, 2012

மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை

மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.

45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.

எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!

விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’

ஐந்து சென்டில்… 1,25,000!

நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி
25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites