இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, August 11, 2016

பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் பூந்தொட்டிகள்

பூக்கள் மலரும் இடங்களில் நம்பிக்கையும் மலரும்...’ என்கிறதொரு பொன்மொழி. பூக்கள் சூழ்ந்த வாழ்க்கை ரசனையானது. அழகானது. ஆரோக்கியமானது. பூக்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அதேபோலத்தான் பூந்தோட்டம் பிடிக்காதவர்களையும் பார்க்க முடியாது. மனிதர்கள் வாழும் இடங்களே சுருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், பூக்கள் வளர்ப்பதும், பூந்தோட்டம் அமைப்பதும் எப்படி சாத்தியம் என்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

இருக்கும் இடத்துக்குள் பூக்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்களைப் பார்ப்பதற்கு முன், பூந்தொட்டிகள் அமைக்கிற கலாசாரம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வோமா? வாடகை வீட்டில் வசிக்கிறோம்... அங்கேயே நிரந்தரமாகத் தங்கும் பகுதி என்பது சாத்தியமில்லை. வேறு வீடுக்கு மாற வேண்டியிருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் செடிகளே வளர்க்க ஆசைப்படக்கூடாதா என்ன? நம்முடைய குழந்தைகளை வளர்க்கிறோம். 

எப்போதும் நம்முடனேயே வைத்துக் கொள்கிறோம். போகிற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறோம்... அதுபோலத்தான் நாம் வளர்க்கும் செடிகளையும் எங்கே போனாலும் நம்முடனேயே எடுத்துச் செல்லலாம் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்த பூந்தொட்டிகள். இன்னொரு காரணம் இடப்பற்றாக்குறை. இன்று மண் என்பதையே பார்க்க முடியாத அளவுக்கு எங்கெங்கு பார்த்தாலும் சிமென்ட் போடப்பட்ட பகுதிகள்தான். 

அந்தப் பகுதிகளை அழகுப்படுத்தவும் பூந்தொட்டிகளை வைக்கிறோம். பூந்தொட்டிகளில் மண் நிரப்புவதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். பூந்தொட்டிகளை எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்போம். வீட்டின் வராண்டா பகுதியில் அதாவது, வீட்டையும் தோட்டத்தையும் இணைக்கிற பகுதிகளில் பூந்தொட்டிகளை வைக்கலாம். வீட்டினுள்ளும் வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிப்பதற்கும் பூந்தொட்டிகளைப் பயன்படுத்தலாம். 

உதாரணத்துக்கு மணிபிளான்ட் செடியை ட்ரெல்லி அல்லது lattice என்கிற வேலி போன்ற அமைப்புடன் வைக்கலாம். அல்லது சின்ன செங்கல்கட்டு போல அமைத்து அதில் மண்ணை நிரப்பி அதற்கு மேல் செடிகளை வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிக்க room divider ஆகவும் இவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் ஆங்காங்கே செடிகளை வைக்கும்போது வீட்டுக்கும் உயிரோட்டம் வரும். வீட்டினுள் டேபிளின் மேல் செடிகளை வைக்கலாம். வீட்டின் முன் வைக்கலாம். மொட்டை மாடியில் வைக்கலாம். 

வீட்டிலேயே ஏதோ ஒரு பார்ட்டி நடத்துகிறீர்கள் என்றாலும், இந்தத் தொட்டிகளை அழகாக அடுக்கி வைத்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பவும் அவற்றை அவற்றின் இடங்களுக்கே எடுத்துச் சென்று விடலாம். பூந்தொட்டிகளிலேயே இன்னொரு வகை தொங்கும் தொட்டிகள். தொட்டிகளை ஏன் தொங்க விட வேண்டும்? 2 மாடிக் கட்டிட வீடு என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாடியிலும் தொங்கும் தொட்டிகளை அமைத்தால் அந்த உயரத்தை இணைக்கும்படியான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். 

ஆகாயத்திலிருந்து தொங்குகிற மாதிரியும், செடிகள் தழைத்துக் கீழே தொங்குவதும் ரம்மியமான காட்சியாக இருக்கும். மண் தொட்டியா, சிமென்ட் தொட்டியா என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். மண் தொட்டியே சிறந்தது. அதில் பல வடிவங்களை வாங்கிக் கொள்ளுங்கள். சிமென்ட் தொட்டிகள் நீண்ட காலம் உழைப்பவை. ஆனால், அவற்றில் சூடு அதிகமிருக்கும். எடை அதிகமானவையாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், சிமென்ட் தொட்டிகளுக்கு நீங்கள் என்னதான் டெரகோட்டா பெயின்ட் அடித்தாலும் மண் தொட்டிகளுக்கே உரித்தான அந்தப் பாரம்பரியம் வராது. 

செடிகள் வளர்ப்பது என்பதே நல்ல விஷயம். அப்படி இருக்கும்போது, மண் தொட்டிகளை வாங்கி வைப்பதன் மூலம் நமது பாரம்பரிய தொழில் அழியாமல் பாதுகாக்கவும் மறைமுகமாக உதவுகிறோம். மண் தொட்டிகளில் சின்னது முதல் பிரமாண்டமானது வரை பல அளவுகள் உள்ளன. மண் தொட்டிகளுக்கும் சிமென்ட் தொட்டிகளுக்கும் இடையில் டெரகோட்டாவில் பிளாஸ்டிக் தொட்டிகளும் கிடைக்கின்றன. சிலர் அவற்றையும் உபயோகிப்பதுண்டு. இவை தவிர water saving pots என்றும் கிடைக்கின்றன. இது இரண்டு வகைகளில் பயன்
படும். வெளியூருக்குச் செல்லும்போது தண்ணீர் ஊற்றி வைத்தால் மண்ணே தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும். 

இன்னொன்று இந்தத் தொட்டிகளை டேபிள் போன்ற இடங்களில் வைத்தாலும் தண்ணீர் வெளியே கசியாது. மேல் பகுதிக்கு ஈரப்பதம் வராது. கொசு வருமோ என்கிற பயமும் இருக்காது. இந்தத் தொட்டிகளில் ஓவல், சதுரம், வட்டம் எனப் பல வடிவங்கள் கிடைக்கின்றன. இவற்றை போன்சாய்க்கும் நாம் பயன்படுத்தலாம். இவற்றில் அடுத்த தரம் எனப் பார்த்தால் செராமிக் தொட்டிகள். அவற்றுக்கும் தனி அழகு உண்டு. இப்படி அவரவர் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப தொட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்தத் தொட்டியானாலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக கீழே இறங்கி வருகிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்.

சரி... இவற்றில் என்ன மாதிரியான செடிகளை வைக்கலாம்?
பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை. ஒரு தொட்டியில் ஃ வடிவத்தில் 3 செடிகளை வைத்து பிறகு அவற்றை ஷேப் செய்து அழகுப்படுத்தலாம். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பது பராமரிப்புக்கும் எளிதானது. ஒரு பெரிய தோட்டத்தைப் பராமரிப்பதற்கும் சில தொட்டிகளை வைத்துப் பராமரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அந்தந்த செடிகளுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

இதையே வணிக ரீதியாக எப்படிச் செய்யலாம்?
50 தொட்டிகள் வைப்பது வரை அதைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம். அதைத் தாண்டும் போது சமாளிப்பதும் பராமரிப்பதும் சற்றே சிரமமாகும். அந்த மாதிரி நேரத்தில் அழகான செடிகளை தொட்டிகளில் வளர்த்து வாடகைக்கு விடலாம். பெரிய பெரிய விழாக்கள் நடைபெறும் இடங்களில் பூக்கள் வைப்பது போல தொட்டிகளில் செடிகளும் வைப்பார்கள். அந்த நேரத்துக்கு அந்தச் சூழலை பசுமையாக்கித் தருவதே இவற்றின் வேலை.

தொங்கும் தொட்டிகளில் கீழே தழைத்து வருகிற மாதிரியான சின்ன கொடிகள், ஆஸ்பராகஸ், பைலியா போன்ற வகைகளை வைக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். பூந்தொட்டிகளை வைப்பதற்கென்றே இப்போது ஸ்டாண்டுகள் வந்திருக்கின்றன. இரும்பில் இருக்கும். வட்டவடிவத்தில் வைக்கலாம். செங்குத்தாக வைக்கலாம். ஒரே ஸ்டாண்டில் நான்கைந்து தொட்டிகளைக்கூட வைக்கலாம். இவற்றை நமது கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். ஒரு பார்ட்டி நடக்கிறது... தொட்டிகளை நடுவில் வைக்கலாமா? சுற்றி வைக்கலாமா? டேபிள் மீது வைக்கலாமா? இதையெல்லாம் அவரவர் கற்பனைத் திறனைப் பொருத்தது.

தொட்டிகளின் தரம் இன்னும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என நினைத்தால் நாம் வாங்கி வரும் மண் தொட்டிகளில் ரெட் ஆக்சைடு அடித்து வைக்கலாம். தொட்டிகளைக் கீழே வைக்கும் போது தண்ணீர் தேங்காமலிருக்க Drain cells என்பவை கிடைக்கின்றன. அவற்றின் மேல் தொட்டிகளை வைத்தால் தண்ணீர் தேங்காது. தரை கெடாது. அல்லது அடியில் ஒரு தட்டு வைத்து அதன் மேல் தொட்டிகளை வைக்கலாம். ஆனால், அப்படி வைக்கிற போது அதில் தேங்குகிற தண்ணீரை முறையாக சுத்தம் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அதுவே கொசுக்கள் விருத்தியாகக் காரணமாகி விடும்.

பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் சில முறைகள் உள்ளன. 12 இன்ச் தொட்டி என்றால் 250 மி.லி. தண்ணீர் அல்லது ஜூஸ் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாட்டிலில் பின் வைத்து மெல்லிய துளைகள் போட்டு, தண்ணீரை நிரப்பி வையுங்கள். அதன் வழியே தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் 2-3 நாட்களுக்குக்கூட தண்ணீர் விடாமல் செடிகளைப் பராமரிக்க முடியும். மாடியில் வைப்பதற்கேற்ப எடை குறைவான மண் நிரப்புவது எப்படி என்றும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அவற்றையும் இந்த விஷயத்தில் பின்பற்றலாம். 

பூந்தொட்டிகளை வளர்ப்பது என்பது மிக முக்கியமான ஒரு பொழுதுபோக்கு. குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் அருமையான பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில் உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரை மணி நேரம் இவற்றுக்காக செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை!

பெண்களுக்கு இது மிகவும் அருமையான  பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில்  உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரைமணி நேரம் இவற்றுக்காக  செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites